மீண்டும் சீறிப்பாயும் சார-பாம்பு!


சில மாதங்கள் வரை அடக்கப்பட்டிருந்த இனவாதிகளின் வாய்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இவர்களின் இயங்கங்களும் செயற்பாடுகளும் புரியாத புதிர்களாகவே இருக்கின்றன. இவர்கள் சுயமாக இயங்குகிறார்களா? அல்லது இவர்கள் பின்னிருந்து சிலரால் இயக்கப்படுகிறார்களா? இந்த சூழ்நிலையில் இவர்களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கும் பொழுது ஏற்கனவே (இவர்களை இயக்குவதாக) சந்தேகிக்கப்பட்டவர்களையும் வேறு விதமாகவே சிந்திக்க வேண்டியுள்ளது. சர்வதேசம் உத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் போதும் இவர்கள் வீதியில் இறங்கி இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இருந்தால் இவர்களக்குப் பின்னாலுள்ள சக்திகள் யார் என்று பல சந்தேகங்கள் தோன்றுகின்றன.

 புதிய குற்றச்சாட்டுக்கள்:
சென்ற காலங்களை விட தற்பொழுது புதுவிதமான குற்றச்சாட்டுக்களையும், பழிகளையும் முஸ்லிம்கள் மீது சுமத்தி வருகின்றனர். அதிலும் விஷேடமாக அமைச்சர்களான றவூப் ஹக்கீம் மற்றும் றிஷாத் பதியுதீன் ஆகியோரையும் மிக மோசமாகத் தாக்கியும், கண்டித்தம் வருகின்றனர். அமைச்சர் ஹகீம் அவர்களைப் பற்றிக் கூறும் போது:

'மு.கா ஆனது எக்கொள்கையும் இல்லாது எக்கட்சியிலும் போய் சேர்ந்து கொள்ளும் விபச்சாரியைப் போன்றது. எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் அங்கம் வகித்து சகல சலுகைகளையும் அனுபவித்து வரும் ஒரு கயங்கரவாதக் கட்சியாகும். மேலும் நாட்டில் முஸ்லிம் தீவிரவாதத்தினை பரப்பி கிழக்கினை பிரிக்கும் செயற்பாட்டினை முஸ்லிம் காங்கிரசே செய்து வருகிறது.

மேலும் நாட்டில் தீவிரவாதத்தினை பரப்பி கிழக்கில் தனி முஸ்லிம் ஆட்சியினை அமைக்கும் முக்கிய செயலை ஹக்கீமே செய்து வருகின்றார். நாட்டில் அநாவசியமான முறையில் பள்ளிவாசல்களையும் மதஸ்தலங்களையும் அமைத்து முஸ்லிம் சமூகத்தினை தீவிரவாத கொள்கைக்குள் மாற்றி நாட்டில் பிரிவினையினை தூண்டும் கொள்கையிலேயே இவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையிலும் மத்திய கிழக்கு நாட்டு முஸ்லிம் கொள்கைகளைப் பரப்பி இலங்கையில் கொடூரமான செயல்களை முஸ்லிம் மக்களிடையே பரப்பி இலங்கையில் அமைதியின்மையினையும் தீவிரவாதத்தினையும் பரப்பவே இவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்கின்றனர். இன்று இலங்கையில் இருந்து மத்திய கிழக்கிற்கு சென்றுள்ள சிங்கள தமிழ் பெண்கள் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியுள்ளனர். அதே போல் கிழக்கிலும் தமிழ் பெண்களை மத மாற்றம் செய்து சமூக அழிப்பினை செய்து கொண்டுள்ளனர். இவை அனைத்திற்கும் தலைமை தாங்கும் சக்தியாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுகின்றது.

இவ்வளவு குற்றச்சாட்டுக்களையும் நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டினால் பரவாயில்லை. ஆனால் தமது உரைகளிலும், பத்திரிகை மாநாடுகளிலும் இடையிடையே 'வல் பரயா' என்றும் 'பிஸ்ஸா' என்று வர்ணனை வார்த்தைகளோடு சொல்லிக் காட்டியது இவர்களின் அநாகரிகமான செயற்பாடு எப்படிப்பட்டது என்பதை உணரலாம்.

அது போலவே அமைச்சர் றிஷாத் அவர்கள் மீதும் பயங்கர குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. நாட்டுக்குள் தனியான முஸ்லிம் வலயங்களை நிர்மாணிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து இவர் நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனவும், வில்பத்து சரணாலயம் தற்போது அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில், வில்பத்து முதல் மன்னார் வரையில் எஸ்.எச் ஜஸஸ்மின் சிட்டி என்ற பெயரில் பாரியதொரு வீடமைப்புத் திட்டம் இவர் தலைமையிலேயே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்த வீடமைப்புத் திட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மட்டுமன்றி குறித்த இனவாத அமைப்பின் செயலாளர் அண்மையில் நடந்த ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் றவூப் ஹக்கீமினால் ஜெனீவாவுக்கு வழங்கப்பட்ட பிரதியொன்றைக் காட்டி இதில் 50 பக்கங்கங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் இந்நாட்டில் முஸ்லிம்கள் எமக்குச் செய்த துரோகங்களை 50.000 பக்கங்களால் எழுத முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் சென்ற சனிக்கிழமை (22) மாவனல்லை நகரில் நடைபெற்ற டீடீளு கூட்டத்தில், 'நாங்கள் மாவனல்லையில் இருந்து போகும் பொழுது ஹஸன் மாவத்தையின் பெயரை அனாகரிக தர்மபால மாவத்தையென மாற்றிவிட்டுதான் போவோம்' என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டம் முடிந்து அங்கிருந்த சில இனவாதிகள் சும்மார் 50-60 பேருடன் ஹஸன் மாவத்தைக்கு வந்து ஹஸன் மாவத்தை எனக் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையை அனாகரிக தர்மபால மாவத்தையென பலாத்காரமான முறையில் சட்டவிரோதமாக மாற்றினர்.

ஒரு வீதியின் பெயரை மாற்ற வேண்டுமானால் அந்தப் பிரதேசத்தின் உள்ளுராட்சி மன்றத்தில் அதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டு அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பின்னரே அதனை மாற்ற வேண்டும் என்பதே நடைமுறையில் உள்ள எமது நாட்டு  சட்டமாகும். ஆனாலும் பகிரங்கமாக நடுசந்தியில் நாட்டின் சட்டத்தினை மீறியும் யாருக்கும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க இயலாமல் போனது இந்நாட்டில் நீதி செத்து விட்டது என்பதை அறிவிக்கிறது.

யார் றவூப் ஹக்கீம்?
சரி நீதி தான் செத்து விட்டது என்றாலும் நீதி அமைச்சருக்கும் இதே கதி தான் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. றவூப் ஹக்கீம் என்பவரை ஒரு சாதாரண பிரஜையாகப் பார்க்காமல் அவர் இந்நாட்டில் எந்த அந்தஸ்துள்ள பிரஜை என்பதை கண் முன் நிறுத்திப் பார்த்தால் மிகவும் கேவலமாக எண்ணத் தோன்றுகிறது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கொளரவ நீதி அமைச்சரை 'வந்தான் வருத்தான்' 'பைத்தியகாரன்' என்றெல்லாம் திட்டுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது? இப்படிக் கேவலமாகத் திட்டுவதால் றவூப் ஹக்கீமை விட இந்நாட்டுக்கே கேவலம் என்பதை இந்நாட்டின் புத்திஜீவிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் தாம் ஒரு நீதி அமைச்சர் என்ற வகையிலாவது ஏன் ஒரு வழக்கையேனும் பதிவு செய்யக் கூடாது? இந்நாட்டில் நீதி அமைச்சருக்கே ஒரு சாதாரண விடயத்திற்கேனும் நீதி பெற முடியாவிட்டால் மற்றைய சாதாரண பிரஜைகளின் நிலை என்னவென சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆனால் இதுபற்றி .தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்:

'முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் பொது பல சேனா இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் அலரி மாளிகையில் தயாரிக்கப்பட்ட சின்னத்திரை நாடகம் என தெரிவித்துள்ளார். இந்த மோதலானது முற்று முழுதான நாடகம் என கொழும்பில் சென்ற 24.03.2014 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே குறிப்பிட்டார். றவுப் ஹக்கீம் அரசாங்கத்திற்கு உள்ளேயே இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதாகவும் தேர்தல் காலத்தில் மாத்திரமே இது நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அமைச்சர் ரிஷாத் அவர்கள் தம் மீது சுமத்தப்பட்டுள்ள பழிகள் பொய்யானது எனவும், பொது பல சேனாவுக்கு எதிராக தாம் ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் ஊடகத்திற்குத் தெரிவித்து இருந்தார். இது நடக்குமா என காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அஷின் விரத தேரரின் இலங்கைக்கான விஜயம்:
முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கு வாதியும் 'பௌத்த பயங்கரவாதத்தின் முகம்' என்று ‘TIMES’ சஞ்சிகையினால் வர்ணிக்கப்படும் மியன்மார் நாட்டின் '969 இயக்கம்' என்ற அமைப்பின் தலைவருமான அஷின் விரத தேரர் இலங்கை வருகின்றார். பொது பல சேனாவின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கை வருகின்றார் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

'இவ்விடயம் குறித்து ஆரவாரம் கூச்சல் போட அப்படி ஒன்றும் அவசரம் இல்லை. சம்பந்தப்பட்டோருக்கு நேரம் வரும்போது இதுபற்றி நாம் தெரியப்படுத்துவோம். அவ்வளவுதான். அவர் எவ்வளவு காலம் இங்கு தங்கியிருப்பார் என்பது குறித்து ஊடகங்கள் இப்போது அவசரமாக அறிந்து கொள்ளத்தேவையில்லை. நாங்கள் திட்டமிட்டு உரிய தருணத்தில் அது குறித்து அறிவிப்போம்' என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தி ஞானாசார தேரர் தெரிவித்தார்.

'அவரது வருகைக்கான சரியான திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் அவர் இங்கு வருவது உறுதி' – என்கிறார் பொது பல சேனாவின் கல்வி ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட இணைப்பாளரான சமீலா லியனகே.
'ஆசியப் பிராந்தியத்தில் உள்ள பௌத்த நாடுகள் முஸ்லிம்கள் மற்றும் பிறமதத்தவர்களினால் நெருக்கடிகளையும் வன்முறைகளையும் கூட எதிர்கொள்ளவேண்டி இருக்கின்றன. தாய்லாந்து, மியன்மார், பங்களாதேஷ் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். இதுவே மியன்மாரில் '969 இயக்கம்' என்ற அமைப்பை அஷின் விரது தேரர் ஆரம்பிக்கப் பிரதான காரணமாகும்.

'நாங்கள் தாய்லாந்து, மியன்மார் நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளோம். ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கும் நாம் விஜயம் செய்வோம். 'இந்தநாடுகளில் இதே கருத்துடன் செயற்படுகின்ற பௌத்த சிவில் சமூகங்கள், பௌத்த புத்திஜீவிகள், சிறப்பாக இயங்கும் பௌத்த அமைப்புகள் என பல தரப்பினருடனும் இணைந்து இந்த விடயத்தில் பூகோள ரீதியில் செயற்படக்கூடிய சர்வதேச வலையமைப்பு ஒன்றை நாம் நிச்சயம் உருவாக்குவோம்.

'தற்போதைக்கு அஷின் விதுர தேரருடன் குறைந்த பட்சம் பிராந்திய வலையமைப்பு ஒன்றை உருவாக்குதற்கான தந்திரோபாய உத்தி குறித்து நாம் கலந்தாலோசனை செய்வோம். அதற்கு எங்களுக்கு உறுதியான ஒரு திட்டடம் தேவை' என்று மேலும் கூறினார் சமீலா லியனகே.

தீர்வு என்ன?
இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் எமக்கு உதவி செய்ய முடியாது. நாம் ஆயுதம் ஏந்திப் போராடவோ அல்லது அதற்கான தயாரிப்போ எம்மிடம் இல்லை. சக வாழ்வை இஸ்லாம் வலியுறுத்தி இருக்கிறது. பிறர் நலம் பேணி நாம் நடந்துகொள்ள வேண்டும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய }றா கவுன்சில் போன்ற மற்றும் பல தேசிய அமைப்புக்கள் தங்களால் முடியுமான பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றன. எனவே பொறுப்புள்ள எந்தவொரு நிறுவனங்களையும் எம்மால் குறை கூற முடியாது.

ஆனால் இப்போதைக்கான ஒரேயொரு ஆயுதம் முஸ்லிம் சமூக ஒற்றுமை மட்டுமே! இயக்கம், கட்சி வேறுபாடுகளுக்கு மத்தியில் நாம் ஒன்றுபடுவேமேயானால் அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. எமது ஒற்றுமையின்மையையும், முரண்பாடுகளையும் அவர்கள் அறிந்து கொண்டு எமக்கு மத்தியில் மோதல்களை உருவாக்க சதித் திட்டங்களைத் தீட்டுகின்றனர். அதன் முதற்கட்ட பணியே சென்ற சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில நாளேடில் ; Save SL Muslims from Thawheed Jamaat” என்ற தலைப்பில் வெளியான ஒரு செய்தி என எண்ணத் தோன்றுகிறது.

தஃவா அமைப்புக்களும், இயக்கங்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையை விளங்கி செயற்பட வேண்டும். சில தஃவா அமைப்புக்கள் தமது பிரச்சாரங்களில் எல்லை மீறி செயற்படுகின்றனர். இச்செயற்பாடானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும். மடடுமின்றி அதனால் குறிப்பிட்ட ஜமாத்துக்கள் மட்டுமல்ல ஏணையோரும், முழு முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட போகிறார்கள் என்பதை உணர்வார்களாக! எனவே இஸ்லாமிய எதிரிகளின் திட்டங்களின் புதுப்புது வடிவங்களை மிக நுணுக்கமாக அறிந்து செயற்பட வேண்டும்.

யார் என்ன திட்டங்களைத் தீட்டினாலும் உண்மைக்கும், வாய்மைக்குமே வெற்றி என்பது அல்-குர்ஆனின் ஆணை. சகல காரியங்களுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்...

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.(61:8)

No comments: