விஷேட பொலிஸ் பிரிவு: முஸ்லிம்கள் கலந்தாலோசித்தே முடிவெடுக்க வேண்டும்.

சமயங்கள் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகள் சம்பந்தமான விஷேட பொலிஸ் நிலையமொன்று சென்ற இரு தினஙங்களுக்கு முன் கொழும்பு 7 ல்; உள்ள பௌத்த மதவிவகார அமைச்சின் 7ஆம் மாடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையம் மத ரீதியான முறைப்பாடுகள் சகலவற்றையும் முறையீடு செய்யும் வண்ணமே திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலர் திருப்தி அடைந்தாலும் இது பல கோணத்திலும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதாவது இந்நிலையம் பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக புரியும் செயற்பாடுகளை முறைபாடு செய்வதற்காக மட்டுமல்ல என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக கீழ்வரும் காரணங்களுக்காகவும் முறைபாடுகளைச் செய்யலாம்.

  1. மேலே குறிப்பிடப்பட்டது போல குறித்த பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக புரியும் செயற்பாடுகளை முறைபாடு செய்தல்.
  2. முஸ்லிம்களால் பிற மதங்களுக்கு குறிப்பாக பௌத்த மதத்திற்கு அநீதம் ஏற்பட்டதாகக் கருதினால் அவர்கள் முறைப்பாடு செய்யலாம்.
  3. அல்லது முஸ்லிம்கள் மத்தியிலுள்ள ஜமாஅத்கள் அல்லது தரீக்காக்கள் சார்ந்த அமைப்புக்கள் மத்தியில் ஏற்படும் கருத்து முரண்பாடுகள் அல்லது இரு மஸஜித்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற முரண்பாடுகள், பிணக்குகள் போன்றவைகளையும் இங்கு பதிவு செய்யலாம்.


இங்கு குறிப்பிடப்பட்ட முதல் இரண்டு வகை முறைப்பாடுகளினால் பெருப்பான்மை முஸ்லிம்கள் ஒன்றுபடுகின்ற ஹலால், பர்தா, முஸ்லிம் தனியார் சட்டங்கள், மாடறுத்தல் போன்ற இன்னும் பல முஸ்லிம்களின் உரிமைகள் ஆராயப்பட போகின்றன. இதனால் பல இருக்கமான சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு முஸ்லிம்கள் முடக்கப்படும் நிலை உருவாகலாம்.

மூன்றாம் வகை முறைப்பாடானது எமது முஸ்லிம்களின் பிரிவினை, கருத்து வேற்றுமைகள், முரண்பாடுகள் போன்ற பலயீனங்களின் காரணமாக செய்யப்படும் முறைப்பாடாகும். இதன் மூலம் நாடு பூராவும் கட்டப்பட்டு இருக்கின்ற சுமார் 2200 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கைகளில் குறைவு ஏற்படும் ஆபத்துக்கள் இருக்கின்றன. ஏனெனில் இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோருக்கு அதிருப்தி இருக்கிறது. மேற்படி பொலிஸ் பிரிவு ஆரம்ப நிகழ்வில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் எம்.கே.பி. திஸாநாயக்க அவர்கள் 'எமது நாட்டில் சுமார் 20 ஆயிரம் வணக்கஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரம் பௌத்த விகாரைகளும், 5 ஆயிரம் இந்துக் கோவில்களும், 2500 கிறிஸ்தவ தேவாலயங்களும், 2500 பள்ளிவாசல்களும் உள்ளன. இவை போதுமானது' என  குறிப்பிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

இந்த பொலிஸ் பிரிவு உருவானதையிட்டு நம்மில் சிலர் அல்லது சிறு சிறு முஸ்லிம் பிரிவுகள் இப்பொழுதே குளிர்காய நினைத்திருக்கலாம். அதாவது தமது, விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தமது அமைப்புக்கோ, ஜமாஅத்துக்கோ இளைக்கப்பட்டதாக கருதப்படும் அநீதிகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளவும் இது ஒரு சந்தர்ப்பமாக நினைத்து இவர்கள் இந்த பொலிஸ் பிரிவை நாடுவார்களாயின் உண்மையில் நாமே எமது சமூகத்தைக் காட்டிக் கொடுத்தவர்களாக ஆகிவிடுவோம் என்பதில் ஐயமில்லை. சென்ற காலங்களில் நாம் விட்ட பிழையே இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும்.


எமது பிரச்சனைகளை நாமே பேசித் தீர்த்துக்கொள்வோம்!
இதுவரை காலமும் எமது 95 சதவீதமான மார்க்கப் பிரச்சனைகள் மட்டுமன்றி எமது குடும்ப சமூகம் தொடர்பான பல சிக்கல்களை நாம் எமது பிரதேச மஸ்ஜித்கள், பள்ளிவாசல் இணக்க சபைகள், ஜம்இய்யத்துல் உலமா போன்றவைகளினூடாகவே தீர்த்து வந்தோம். இந்த நடைமுறையை நாம் தொடர்ந்தும் கடைப்பிடிக் முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் அல்லாஹ்வின் உதவி நமக்குக் கிடைக்குமே தவிர எவ்வித நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. எமது பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும் எம்மை கீழே தள்ளிவிட நினைப்பவர்களிடம் கொண்டு செல்லப்படுமானால் எமது அழிவுக்காக நாமே குழிபரித்தவர்களாக ஆகிவிடுவோம்.

இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாஅத்துக்கள்  சில்லரைப் பிரச்சினைகளையெல்லாம் பெரிதுபடுத்தி இயக்க வெறியோடு செயற்படாமல் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு போன்ற நல்ல குணாம்சங்களோடு செயலாற்ற தம்மைப் பழக்கிக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் பண்பை உண்டு பண்ணிக்கொள்ள வேண்டும். எந்தவொரு காரியத்தையும் தன்னிச்சையாக முடிவெடுப்பது நாம் எமக்குச் செய்துகொள்ளும் அநியாயம் மட்டுமல்ல முழு சமுதாயத்தையும் அது பாதிப்புக்குள்ளாக்கும்.
சில அமைப்புக்கள் எவ்வித ஆலோசனைகளும், கலந்துரையாடல்களுமின்றி பதில் கொடுக்கவும் கருத்துச் சொல்லவும் முன் வந்ததன் விளைவாக அந்த அமைப்பை மாத்திரமல்ல முழு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. பிற மதங்களை கொச்சைப்படுத்தி பேசியதும், விவாதங்களுக்கு அழைப்பு விடுத்ததும் தஃவாவில் அனுபவமில்லாத தன்மையை எடுத்துக் காட்டியுள்ளது. நாளை அவர்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் வந்ததென்றால் அவர்களை தனிமைப்படுத்தி விட்டுவிட முடியுமா? அல்லது அவர்கள் எமது சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர் என அவர்கள் மீது பழி சுமத்தி விட்டு மௌனிகளாவும் இருந்து விட முடியுமா? என்பதை குறிப்பிட்ட சகோதரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரே குடையின் கீழ ஒன்றுபடுவோம்! அணிதிரள்வோம்!:
'ஊடல் இல்லாமல் கூடல் இல்லை' என்ற முதுமொழிக்கொப்ப சிலபோது நமக்கு மத்தியில் முரண்பாடுகள் ஏற்படும் பொழுது மேலே குறிப்பிடப்பட்டது போல எமது பிரதேச மஸ்ஜித்கள், இணக்க சபைகள், மாவட்ட, பிரதேச ஜம்இய்யத்துல் உலமா போன்றனவைகளினூடாக அவைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். அது கைகூடாத போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய சூறா கவுன்சில் ஆகியவைகளினூக தீர்த்துக் கொள்ளலாம்.

மிக அவசரமாக மேற்படி தாய் அமைப்புக்கள் ஒன்று கூடி, தமக்கிடையே வேற்றுமைகள் மறந்து சமூகத்தில் தத்தமது வகிபாகங்கள் என்ன என்பதை கலந்துரையாடி பொது மக்களை எவ்வாறு எந்நேரமும் எம்முடனேயே வைத்துக் கொள்ளலாம்? அதற்கான செயற்திட்டங்கள் யாவை? என்பன போன்ற விடயங்களை ஆராய வேண்டும்.

புதிய பொலிஸ் பிரிவு என்பது முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கான தீர்வாக இருக்க முடியாது என்றே எண்ணத் தோன்றுகிறது. மாறாக அது மற்றுமொரு பிரச்சனையின் வாயிலாகக்; கூட இருக்க முடியும் என யூகிக்க பல காரணங்களும் இல்லாமலில்லை.

ஏனெனில் சுமார் இரண்டு வருடங்களாக நடந்தேறிய இந்த இனவாத தாக்குதல்கள் தொடர்பாக எந்தவொரு நிறுவனமும் அல்லது தனிமனிதனும் பொலிஸில் புகார் செய்யவில்லை. ஆனால் எப்பொழுது கம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் ஒரு வழக்கு அல்லது முறைப்பாடு செய்யப்பட்டதோ அப்பொழுதே இந்த புதிய பொறிமுறை உருவாக்கப்பட்டது. இத்திட்டமானது பல சந்தேசங்களை உருவாக்கி உள்ளது. மட்டுமின்றி குறித்த இனவாத அமைப்பின் பொதுச் செயலாளர் ' இதுவரைக்கும் எமக்கு எதிராக எவரும் ஒரு வழக்குத் தாக்கல் செய்தது கிடையாது' என பல தடவைகள் சொல்லி வந்ததை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம்.

அடுத்த பக்கத்தில் இப்பிரிவுக்கு குறிப்பிட்ட இனவாத அமைப்பும் மற்றும் பல அரசியற் கட்சிகளும் எதிர்ப்புக்கள் தெரிவித்துள்ளமை புரியாத புதிராக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல நடைமுறைச் சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. உதாரணத்திற்கு கண்டியிலோ அல்லது அநுராதபுரத்திலோ, மட்டக்களப்பு போன்ற தூர இடங்களிலோ ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அவர்கள் கொழும்பு வந்துதான் முறைப்பாடுகள் செய்ய வேண்டுமா? அல்லது அதன் கிளைகள் அப்பிரதேசங்களில் அமையுமா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

அல்லது ஒருவர் 119 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு முறையிட்டால் அது எமதுபணியல்ல என்று அவர்களால் மறுக்கப்படுமா? என்ற பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் பார்க்கும் போழுது இதுவொரு கண்துடைப்பாக அல்லது முஸ்லிம்கள் தமது சகல பிரச்சனைகளையும் இங்கு வந்து முறையிடும் பொழுது மிக இலேசாக முஸ்லிம்களின் விவகாரத்தில் தலையிட்டு சில நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நோக்கமாகவும் இருக்கலாம். இந்த பொலிஸ் பிரிவு முஸ்லிம்களுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதற்கு இவை போன்ற இன்னும் பல காரணங்களை இங்கு பட்டியலிடலாம்.

எனவே முஸ்லிம்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபடுவோம். எமது பிரச்சனைகளை எமது மார்க்க, சிவில் தலைமைகளிடம் முறையிடுவோம். பிற மதத்தவர்களுடனான முரண்பாடுகளுக்கு முடிவு காண மேற்படி எமது அமைபுக்களுடன் கலந்துரையாடிய பின்பே முறைப்பாடுகளை செய்வதா இல்லையா என முடிவெடுக்க வேண்டும். 
எல்லாவற்றையும் அல்லாஹ்வே அறிந்தவன்.

No comments: