பிறை விவகாரம் : தவறிழைத்தது தலையா? கிளையா?


-அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி-

இந்த சர்ச்சையோடு சம்மந்தப்பட்ட மக்களை குறிப்பாக மூன்று பிரிவினராகப் பிரிக்கலாம்.

1. தலைப் பிறை தொடர்பாக அ.இ.ஜ.உ சபையின் முடிவை ஏற்றுக்கொண்ட மக்கள்.
2.தென்பட்ட தலைப்பிறை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது என தமது இயக்கத்துக்குள்ளே முடிவு செய்துகொண்ட சில தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள்.
3. எப்பொழுதும் ஜம்இய்யாவுக்குக் கட்டுப்பட்டு அதன் முடிவை ஏற்றுக்கொள்ளும் மக்கள் இம்முறை தடுமாற்றம் அடைந்து கிண்ணியாக்கிளையின் முடிவை ஏற்று நோன்பை விட்டனர். பின் தலைவர் அவர்களின் விளக்கத்திற்குப்பின் நேரம் தாமதித்துக்கிடைத்த விளக்கம் என கலக்கம் அடைந்தனர்.
4. அ.இ.ஜ.உ வின் கிண்ணியாக்கிளையின் முடிவை ஏற்றுக்கொண்டு பெருநாள் கொண்டாடிய கிண்ணியா பொதுமக்கள்.

• முதல் வகையினர் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எப்பொழுதும் போல தலைமைக்குக் கட்டுப்பட்டு செயற்பட்டனர். எவ்வித குழப்பங்களுக்கும் தாம் அகப்படாமல் தற்காத்துக் கொண்டனர்.

• இரண்டாம் வகையினரின் செயற்பாடும் மக்கள் மத்தியில் அவ்வளவு குழப்பங்களையோ சந்தேகங்களையோ உண்டு பண்ணவில்லை. ஏனென்றால் முழமையாக அவர்களுக்குக் கீழுள்ள மக்களே அவர்களின் பேச்சைக் கேட்டனர். மட்டுமின்றி ஏற்கனவே அவர்களில் பலர் ஜம்இய்யாவின் முடிவை ஏற்பவர்களும் இருக்கின்றனர். அதுவல்லாமல் சர்வதேசப் பிறையை எடுப்போரும் இருக்கின்றனர். எப்படியோ அவர்களின் முடிவும் ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்தவில்லை.

• மூன்றாம் வகைச் சகோதரர்களின் நிலை பரிதாபமானதாகும். ஏனெனில் உண்மையில் அவர்கள் ஜம்இய்யாவின் முழமையான பிறைத் தீர்மானங்களை அறிந்திருந்தால் அவர்கள் நோன்பை விட்டிருக்க மாட்டார்கள். பிறைக்குழக்கள் இனிமேலாவது அதனை மக்கள் மயப்படுத்த முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.

• நான்காம் வகையினருக்கும், நாட்டில் ஏற்பட்ட ஒரு குழப்ப நிலைக்கும், ஜம்இய்யாவுக்கும் அதன் தலைமைக்கும் மக்களில் சிலருக்கு ஏற்பட்ட அவநம்பிக்கைக்கும் காரணம் கிண்ணியாக்கிளையின் தலைமையை மிஞ்சிய செயற்பாடே என்பது மிகத்தெளிவாக விளங்குகிறது. இதற்கான காரணங்களை கீழ்வருமாறு சுருக்கமாக விளக்குகிறேன்.

பிறை கண்டதாக 20 பேரென்ன 2000 பேர்கள் தான் அதனைக் கண்டாலும் தலைமையகம் மறுக்கும் போது அதனை மிஞ்சி செயற்படுவதற்கு எங்கு ஆதாரம் இருக்கிறது? கிளையின் இந்த அத்து மீறலே பிறருக்கு ஆதாரமாக அமைந்தது. கிளை மௌனமாக இருந்திருந்தால் இப்பிரச்சினை அப்படியே அமர்ந்து போயிருக்கும். பெருநாள் கொண்டாடியவர்கள் கொண்டாடி இருப்பார்கள். மற்றவர்கள் நோன்பு பிடித்திருப்பார்கள்.

ஆனால் நாம் கண்ட பிறையை ஏன் மறுத்தார்கள் என்பதற்கான காரணத்தை நீங்கள் கிளைப் பங்குதாரர்கள் என்ற வகையில் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி அந்தக் காரணங்களை அறியாமல் இருந்ததே இந்தப்பிழையான முடிவுக்கான காரணங்களாகும்.

நீங்கள் கண்ட பிறை ஏற்றுக்கொள்ளப்படாமைக்கு கீழ்வரும் தீர்மானங்களே காரணங்களாகும். இந்தத் தீர்மானங்கள் இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல என்பதை கீழ்வருமாறு அறிந்து கொள்ளலாம்.

பிறைக்குழுவின் 05 தீர்மானங்கள்!

06.09.2006 ஆம் திகதி அதன் தலைமையகத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சார்பிலும் பெரிய பள்ளிவாசலின் சார்பிலும் சில தீர்மானங்களை ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து பிறை பற்றிய தீர்மானங்கள் யாவும் பிறைக்குழுவின் குறிப்பிட்ட 05 தீர்மானங்கள் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டு வந்தன.

தீர்மானங்கள் வருமாறு:

(1) உள்நாட்டு வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
(2) பிறை பார்ப்பது என்பது வெற்றுக் கண்களால் பார்ப்பது என்பதை அடிப்படையாகக் கொள்ளப்படும்.
(3) ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்களுக்கு தென்படுவது சாத்தியம் அற்றது என நம்பகரமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து வானியல் அடிப்படையான அந்நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுவதோடு அதன் அடிப்படையில் அன்றைய தினம் பிறை காணாத நாளாக கொள்ளப்படும்.
(4) வானியல் துறையில் புலமை பெற்ற அறிஞர் குழு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் குழுவிற்கு துணையாக செயற்படும்.
(5) பிறை வெற்றுக் கண்களுக்கு தென்படுவது அசாத்தியமானது என தெரிவு செய்யப்பட்ட நாளில் ஒருவர் அல்லது பலர் பிறை கண்டதாக கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமையகத்திற்கு கட்டுப்படல் என்றவகையில் முஸ்லிம் சமூகத்திற்கு இணைந்து செயற்படல் என்ற வகையில் குறித்த நாளில் நோன்பு நோற்கவோ பெருநாளைக் கொண்டாடுவதற்கோ பிறரை விண்டவோ பிரகடணப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் பிறையைக் கண்டதன் அடிப்படையில் செயற்படும் அனுமதியை பெறுவர்.

இத்தீர்;மாணத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அன்றைய நாள் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர், அதன் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ. றிஸ்வி முப்தி ஒப்பமிட்டு இவ்வறிக்கையை எடுத்துள்ளனர்.

இவ்வறிக்கையை மேலும் உறுதிப்படுத்துமுகமாக 15.08.2007 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு 12 மீரானியா ஜும்ஆ மஸ்ஜிதில் நாட்டிலுள்ள அறபிக் கல்லூரி உஸ்தாத்மார்களுக்கான மாநாட்டில் மேற்படி தீர்மானம் இரண்டாம் தடவையாக ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்;டது.

அத்துடன் சென்ற 2011 ஜுலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற முதலாவது பிறை தேசிய மாநாட்டிலும் இதே தீர்மானங்கள் மூன்றாம் முறையாகவும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் நாட்டிலுள்ள ஜம்இய்யாவின் மாவட்ட, பிராந்தியக் கிளைகளின் உலமாக்கள் மடடுமின்றி கல்விமான்கள் வானியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதாவது குறிப்பிட்ட 05 தீர்மானங்களும் முறையே 06.09.2006 ஃ 15.08.2007 ஃ 16.07.2011 என மூன்று முறைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அப்படியானால் கிண்ணியாக்கிளையினருக்கு இந்தத் தீர்மானங்கள் பற்றி ஒன்றுமே தெரியாதா? அல்லது இந்தத் தீர்மானங்களை அறிந்தும் இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்தார்களா? என்ற கேள்விகளுக்கு அவர்களே பதில் சொல்ல வேண்டும்.

கண்ட பிறை உறுதியாக இருந்து அது மறுக்கப்படுமானால்!

பிறை கண்ட விடயம் தமக்கு உறுதியாக இருந்து அதனை பொறுப்பாளர்கள் மறுத்தால் என்ன செய்ய வேண்டும்? என்ற இந்த சிறிய விடயத்தையாவது கிண்ணியாக்கிளை அறியவில்லையா? சாட்சி மறுக்கப்படும் போது ஒருவகையில் தாம் அதனை அமுல்படுத்த முடியுமே தவிர பிறரைத் தூண்டக் கூடாது என்பதே சரியான தீர்ப்பாகும். ஏனெனில் அதன் மூலம் உம்மத்துக்கு மத்தியில் பிளவுகள் சர்ச்சைகள் ஏற்படலாகாது என்தே இதன் பிரதான நோக்கமாகும். இதுபற்றி அறிஞர்களின் தீர்ப்புக்களைப் கீழ்வருமாறு காணலாம்.

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தைப் பாருங்கள்.

ஒருவர் பிறை கண்டதை அதற்குப் பொறுப்பானவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர் தான் கண்ட பிறை அடிப்படையில் செயற்படக் கூடாது. மக்களுடன் சேர்ந்து தான் நோன்பும் பெருநாளும் எடுக்க வேண்டும். சிலவேளை பிறை கண்டதை உறுதிப்படுத்துவதற்காக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள இமாம் நம்பகமானவர்களின் சாட்சியத்தை மறுப்பதன் மூலம் திறக் குறைவு செய்பவராக இருக்கலாம். அதாவது சாட்சியாளர்களின் நம்பகத் தன்மையை தேடிப் பார்ப்பதில் கவனயீனமாக இருப்பதன் மூலமாகவோ தனக்கும் அவர்களுக்கும் மத்தியில் இருக்கும் பகைமை அல்லது மார்க்கத்தில் இல்லாத வேறு காரணங்களுக்காக அவர்களின் சாட்சியத்தை அவர் மறுப்பதன் மூலமாகவோ அல்லது வானவியலாளரின் அன்று பிறை காண முடியாது என்ற தவறான வாதத்தை ஏற்றுக் கொண்டு சாட்சியத்தை மறுக்கக் கூடியவராகவோ அவர் இருக்கலாம். அப்போதும் தலைப் பிறையைத் தீர்மானிப்பதில் அவர் கருத்தை ஏற்க வேண்டுமா? என்று கேள்வி கேட்டால் அதற்கு பதில் ஆம் சரியான அல்லது தவறான முடிவுக்கு வரக் கூடிய நேர்மையான ஆய்வாளராக அவர் இருந்தாலும் அல்லது அந்த விடயத்தில் (மேலே கூறப்பட்டதைப் போன்று) குறை செய்யக் கூடியவராக இருந்தாலும் அவரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவர்கள் விடயத்தில் 'அவர்கள் உங்களுக்கு தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுதால் உங்களுக்கும் அவர்களுக்கும் நன்மை உண்டு. அவர்கள் (வேண்டுமென்றே) பிழை செய்தால் உங்களுக்கு நன்மையும் அவர்களுக்குப் பாவமும் உண்டு' என்று கூறியுள்ளார்கள். எனவே அவரின் பிழைக்கும் திறக் குறைவுக்கும் அவர் மீதே குற்றம் ஏற்படுமே தவிர பிழை செய்யாத திறக் குறைவு செய்யாத முஸ்லிம் மீது குற்றம் ஏற்படாது. (பார்க்க: அல்-பதாவா அல்-குப்ரா, பாகம் : 2, பக்கம் : 460 –464)

மேலும் அவர்களின் கூற்றாவது: 'ஒரு பிறை பிறையாகவும் மாதமாகவும் இருப்பதற்கு நிபந்தனை யாதெனில் அது மக்களுக்கு மத்தியில் பிரபல்யம் அடையவேண்டும்;ளூ (பிறை தென்பட்டு விட்டது என்று) அதைப்பற்றி அவர்கள் பேச வேண்டும் என்பதாகும். பத்து நபர்கள் தான் பிறையை கண்டு அவர்களின் சாட்சியம் மறுக்கப்பட்டு அல்லது அவர்கள் சாட்சி சொல்லாமல் இருந்ததால் அந்தப் பிறை அந்த நகரத்தின் மக்களிடத்தில் பிரபல்யம் அடைய வில்லையானால் ஏனைய முஸ்லிம்களுக்குரிய சட்டம் தான் பிறை கண்டவர்களுக்குமுறிய சட்டமாகும். (அவர்கள் தாம் கண்ட பிறை அடிப்படையில் செயல்படக்கூடாது.) அவர்கள் எவ்வாறு முஸ்லிம்களுடன் தான் அரபாவில் தரிக்க வேண்டுமோ, அறுத்துப் பழியிடவேண்டுமோ, பெருநாள் தொழ வேண்மோ அவ்வாறே முஸ்லிம்களுடன் தான் நோன்பும் நோற்க வேண்டும். 'நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் உங்களுடைய நோன்புளூ நீங்கள் பெருநாள் கொண்டாடும் நாளில் தான் உங்களுடைய பெருநாள்'; என்ற ஹதீஸின் கருத்தும் இதுவாகும். இதனால் தான் இமாமுடனும் முஸ்லிம் கூட்டத்துடனும் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் கை (உதவி) கூட்டத்தின் மீது இருக்கிறது என்றும் இமாம் அஹ்மத் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனடிப்படையில் தான் மாதத்தின் சட்டங்கள் பிரிகின்றன. அந்த மாதம் அந்த நகரத்தின் அனைத்து மக்களுக்கும் உரிய மாதமா? அல்லது அவர்கள் அனைவருக்கும் உரியா மாதம் இல்லையா? அதனை அல்லாஹ்வின் கூற்றான (உங்களில் யார் மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்) என்ற வசனம் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ் நோன்பு நோற்க்குமாறு கட்டளை இட்டது. மாதத்தை அடைந்தவருக்குத்தான். மாதத்தை அடைவது, அடையாமல் இருப்பது என்று சிந்திப்பதற்கு அந்த மாதம் மக்களிடத்தில் பிரபல்யம் அடைய வேண்டும். அப்படிப் பிரபல்யம் அடையாத மாதத்தை அடைய முடியாது. நபி(ஸல்) அவர்களின் கூற்றான 'நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பு பிடியுங்கள்ளூ நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்' என்ற ஹதீஸும் இதனை தெளிவு படுத்துகின்றது. இது போன்ற கட்டளைகள் கூட்டத்திற்குறிய கட்டளையாகும். ஆனால் எவருமற்ற ஒரு இடத்தில் ஒருவர் மாத்திரம் தனியாக இருந்தால் அவர் நோன்பு நோற்க வேண்டும்.
ஏனெனில் அங்கே அவரைத்தவிர வேறொருவரும் இல்லை.' (அல்-இஹ்தியாருல் ஃபிக்ஹிய்யா)

சுட்டிக்காட்டப்பட்ட கூற்றிலும் வேறு இடங்களிலும் இப்னு தைமியா (ரஹ்) சொல்ல வருவது என்ன என்பதை சற்று பார்ப்போம்.

1. மாதம் என்பதைக் குறிக்கும் ஷஷஹ்ர்' என்ற அரபுச் சொல் பிரபல்யம் என்ற அர்தத்தை உள்ளடக்கியுள்ளது. ஒரு கூட்டத்திற்கு மாதம் ஏற்பட்டு விட்டது என்று சொல்வதற்கு அவர்களிடத்தில் அது பிரபல்யம் அடைய வேண்டும்.

2. பிறையைக் குறிக்கும் 'ஹிலால்'என்ற அறபும் பதம் சப்தமிடுதல், பேசுதல் என்ற அர்த்தத்தை தருகிறது ஒரு கூட்டம் எந்தப்பிறையைப் பற்றி எங்களுக்குப் பிறை பிறந்து விட்டது என்று பரவலாகப் பேசிக் கொள்ளவில்லையோ அது அந்த கூட்டத்திற்குப் பிறையாக அமையாது. அதனைப் பத்து நபர்கள் தான் கண்டாலும் பரவாயில்லை. இப்படியான நிலையில் பிறை கண்டவர்களும் அவர்களின் தகவலை நம்பியவர்களும் கூட்டத்தை விட்டுப் பிளவுபட முடியாது.

3. ஒரு கூட்டம் துல்ஹஜ் பிறையை மக்காவில் தென்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்னால் கண்டு விட்டால் அது மக்காவில் ஏற்றுக் கொள்ளப்படாத போது அவர்கள் ஹஜ்ஜின் கிரிகைகளைத் தமது பிறையின் அடிப்படையில் செயல்படுத்த முடியாது. அங்கே உள்ள முஸ்லிம்கள் அரபாவில் தரிக்கும் நாளாகிய இவர்களின் பிறையின் அடிப்படையில் பத்தாவது நாளில் தான் இவர்களும் அரபாவில் தரிக்க வேண்டும். ஏனைய கிரிகைகளையும் அவ்வாறே நிறைவேற்ற வேண்டும். இதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.எனவே இதே தீர்ப்பு தான் நோன்பு, நோன்புப் பெருநாள் ஆகிய தினங்களுக்கும் சரியாகும்.

4. பெரும்பான்மை மக்களுடன் தான் பிறை விடயத்தில் சேர்ந்து நடக்க வேண்டும் என்பதற்கு 'நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் உங்களின் நோன்புளூ நீங்கள் பெருநாள் எடுக்கும் நாளில் தான் உங்களின் பெருநாள்'' என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் ஆதாரமாகும்.

5. (உங்களில் மாதத்தை அடைந்தவர் நோன்பு நோற்கட்டும்.) என்ற அல்லாஹ்வின் வசனத்திலிருந்து ஒரு கூட்டத்தாரிடத்தில் ஒருவரோ பலரோ பிறைக் கண்டு அது ரமழான் மாதம் என்று மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரபல்யம் அடையவில்லை என்றால் அந்த நாளில் அவர்களில் ஒருவரும் நோன்பு பிடிக்க முடியாது. ஏனெனில் மக்களிடம் அந்த மாதம் பிரபல்யம் அடைந்தால் தான் அதனை அடைய முடியும்.

6. 'நீங்கள் பிறை கண்டு நோன்பு பிடியுங்கள்' என்ற ஹதீஸ் தனிப்பட்டவர்களுக்கு உரியதல்ல. ஒரு கூட்டத்திற்கு உரியது. கூட்டத்திற்கு மாற்றமாக ஒருவரோ இருவரோ நோன்பையோ பெருநாளையோ எடுக்க முடியாது.

பிறை தொடர்பாக கருத்துரைத்த எல்லா அறிஞர்களும் ஒரு விடயத்தில் ஒற்றுமைப்படுகிறார்கள். ஒரு சமூகத்தில் பெரும்பாலான மக்கள் எந்தக் கருத்தை நடை முறைப்படுத்துகிறார்களோ அந்தக் கருத்தையே அனைவரும் நடைமுறைப்டுத்த வேண்டும். தங்களுக்குள் பிரிந்து செல்ல முடியாது என்பதை ஒருமித்து சொலகிறார்கள்.

நவீன காலத்தில் சர்வதேசப் பிறையை வலியுறுத்திய பேரறிஞர்களில் முக்கியமானவர்கள் அல்லாமா அல்பானி (ரஹ்) அவர்களும் அல்லாமா இப்னு பாஸ்(ரஹ்) அவர்களுமாவார்கள். அவர்கள் இருவரும் மற்றும் சவூதியின் பேரறிஞர்கள் சபையின் அனைத்து அறிஞர்களும் பெருநாள் தினத்தில் பிரிந்து விடக்கூடாது என்றும் ஒரேநாளில்தான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்றும் மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.


இது பற்றி அல்லாமா அல்பானி (ரஹ்) அவர்கள்:

1. அவர்கள் தனது தமாமுல் மின்னா என்றநூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்: 'இஸ்லாமிய நாடுகள் (சர்வதேசப் பிறையில்) ஒன்றுபடும் வரை ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்கள் நாட்டுடனே நோன்பு பிடிக்க வேண்டும். தங்களுக்குள் பிரிந்து சிலர் தங்கள் நாட்டுடனும் வேறு சிலர் அந்த நாட்டுக்கு முன்னரோ, பின்னரோ நோன்பு பிடித்த நாடுகளுடன் நோன்பு பிடிக்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அது சில அரபு நாடுகளில் சில வருடங்களாக நடந்து வருவதைப் போல ஒரு சமூகத்திற்குள்ளே கருத்து வேறுபாட்டின் வட்டத்தை விரிவுபடுத்துவதாக அமையும்.' (தமாமில் மின்னா 398–399)

2. ஸில்ஸிலா ஸஹீஹா என்ற தனது நூலில் கூறும் போது 'இஸ்லாமிய அரசுகள் தங்கள் ஹஜ்ஜின் நாளை எவ்வாறு ஒன்றுபடுத்தியுள்ளார்களோ அவ்வாறே தங்கள் நோன்பு பிடிக்கும் நாளையும் பெருநாளையும் ஒன்றுபடுத்த வேண்டும் என்று நாம் கருதுகிறோம். அவர்கள் அந்த விடயத்தில் ஒன்றுபடும் வரை அவர்களுக்குக் கீழ் வாழும் சமூகங்கள், சிலர் தங்கள் நாட்டுடனும் வேறு சிலர் இன்னொரு நாட்டுடனும் நோன்பு பிடித்து தங்களுக்குள்ளே பிளவுபடுவதை நாம் ஆதரிக்க மாட்டோம். இக்கருத்து உஸூல் (அல் - பிக்ஹ்) கலையில் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று சிறிய பாதிப்பை செய்து பெரிய பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளல் என்ற சட்ட விதியைச் சார்ந்ததாகும்.' (ஸில்ஸிலா ஸஹீஹா பாகம் 6, பக்கம் 254, ஹதீஸ் எண் 2624)

3. நீங்கள் நோன்பு பிடிக்கும் நாளில் தான் நோன்பு.நீங்கள் நோன்புப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் நோன்புப் பெருநாள். நீங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள் என்பது நபி(ஸல்) அவர்களின் ஹதீஸாகும்.

அறிஞர்கள் இந்த ஹதீஸை ஆதாரமாக கொண்டு ஓரிடத்தில் வாழும் மக்கள் அங்குள்ள பெரும்பாலான மக்களுடன் நோன்புபிடிக்க வேண்டும், பெருநாள் எடுக்க வேண்டும் தங்களுக்குள் பிரிந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

மேற்படி ஹதீஸை அல்பானி(ரஹ்) அவர்கள் தனது மேற்குறிப்பிட்ட நூலில் ஸஹீஹ் (ஆதாரபூர்வமான செய்தி) என்று விளக்கி விட்டு இது பெரும்பாலான மக்களுடனே நோன்பையும் பெருநாளையும் எடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாக விளக்கமளித்துள்ளார்கள். அதற்கு மேலும் பல அறிஞர்களின் கூற்றுக்களையும் ஆயிஷா(ரலி) அவர்களின் தகவலையும்மேற்கோள் காட்டியுள்ளார்கள்.

4. அதே போன்று ஒருவர் உண்மையாக பிறை கண்டு அவரின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அவர் கண்ட பிறை அடிப்படையில் அவருக்கு செயற்பட முடியாது. மக்களுடன் சேர்ந்தே நோன்பும் பெருநாளும் எடுக்க வேண்டும் என்று அல்பானி(ரஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். நோன்பு பெருநாள் ஜமாஅத் தொழுகை போன்ற கூட்டு வணக்கங்களில் தனிப்பட்டவருடைய கருத்தை அது அவரின் பார்வையில் சரியாக இருந்தாலும் மார்க்கம் ஏற்றுக் கொள்ளாது என்று கூறுகிறார்கள்.

ஸஹாபாக்களுக்கிடையில் இருந்த கருத்து வேறுபாடுகளை சுட்டிக் காட்டி அக்கருத்து வேறுபாடுகள் அவர்கள் ஒரு இமாமுக்கு பின்னால் ஒன்று சேர்ந்து தொழுவதைத் தடுக்கவில்லை என்பதையும் குறிப்பாக உஸ்மான்(ரலி) அவர்கள் மினாவில் நபி(ஸல்) அவர்கள் தொழுதது போன்று சுருக்கித் தொழாது பூரணமாக தொழுததை இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் குறை கூறிவிட்டு அவரைப் பின்பற்றி பூரணமாகவே தொழுதார்கள். அவர்களிடத்தில் ஏன் குறை கூறிவிட்டு நீங்களும் அவரைப் பின்பற்றி பூரணமாக தொழுதீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு வேறுபடுவது (பிளவுபடுவது) மிகக் கெட்டது என்று கூறினார்கள் என்ற செய்தியையும் அல்பானி(ரஹ்) தன் கருத்துக்கு சான்றாக எடுத்துக் காட்டி விளக்குகிறார்கள். (பார்கக: ஸில்ஸிலா ஸஹீஹா, பாகம் : 1, பக்கம்: 443 –445, ஹதீஸ் எண்: 224)

5. இப்னு பாஸ் (றஹ்) அவர்களின் கருத்தாவது: நோன்பு மற்றும் பெருநாளில் உங்களுடன் இருக்கும் முஸ்லிம்களுக்கு நீங்கள் மாறுபடுவது குழப்பத்தை ஏற்படுத்தும். மக்கள் மத்தியில் கேள்விக்கும் மறுப்புக்கும் வழிவகுக்கும். கருத்து முரண்பட்டு பிரச்சினைபடுவதையும் வாக்குவாதப்படுவதையும் தூண்டக் கூடியதாக அமையும். இம்முழுமையான இஸ்லாமிய மார்க்கம், ஒற்றுமைப்படுவதையும், உடன்படுவதையும், நல்ல காரியத்திலும், இறை அச்சகத்திலும், ஒத்துழைப்பதையும் முரண்பட்டுப் பிரச்சினைப்படுவதைத் தவிர்ப்பதையும் தூண்டுகிறது. இதனால் தான் (அல்லாஹ்வின்கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.) பிரிந்து விடாதீர்கள் என அல்லாஹ் கூறுகிறான். மேலும் (நீங்கள் இருவரும் நன்மாராயம் கூறுங்கள்ளூ வெறுப்படையச் செய்யாதீர்கள். உடன்பட்டு நடந்து கொள்ளுங்கள், பிளவுபட்டு நடக்காதீர்கள்) என்று நபி (ஸல்) அவர்கள், முஆத்(ரலி) அவர்களையும் அபூ மூஸா(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்த போது உபதேசம் செய்தார்கள். (பார்க்க :- மஜ்மூஃ பதாவா இப்னு பாஸ்: பாகம் :- 15, பக்கம் :- 103 –104)
எனவே எந்த அடிப்படையை வைத்துப் பார்த்தாலும் கிண்ணியாக் கிளை தவறான ஒரு முடிவையே எடுத்திருக்கிறது எனலாம். இவைகள் எல்லாவற்றையும்விட தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே செய்த தவறுக்கான வருந்தவேண்டியது கிளையே தவிர தலையல்ல.

'எல்லாவற்றையும் அல்லாஹ்வே மிக அறிந்தவன்'

No comments: