முக்கிய அறிவித்தல்

நாட்டில் ஒலிப்ரப்பு சாதனங்களைப் பயன்படுத்துவது சமூக நலன் கருதி சம்மந்தமாக பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மட்டுமன்றி இது தொடர்பாக பொறுப்பான சமூகத் பொறுப்பாளர்கள் மக்களுக்கு வழிகாட்டல்கள் வழங்க வேண்டுமெனவும் அபிப்பிராயப்படுகின்றனர். அதனடிப்படையில் சென்ற 14.02.2008 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இது தொடர்பாக நாடு முழுவதற்கமாக அனுப்பி வைத்த சுற்றுநிரூபத்தை இங்கு பிரசுரக்கிறேன்.



முக்கிய அறிவித்தல்

மஸ்ஜித் நிருவாக சபை மற்றும் ஊர் ஜமாஅத்தினர் கவனத்துக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

'ஷ_ரா' மூலமாக காரியமாற்றுவதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் உம்மத்தவர்களுக்கும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இக்கட்டளையை அவர்கள் முழுமையாக அமுல்படுத்தினர்.

'இவர்களின் காரியமோ தங்களுக்குள் கலந்தாலோசித்தலாக இருக்கும்' ( அஷ;ஷ_ரா : 38)


'மேலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக' (ஆல இம்ரான் : 159)

போன்ற அல்-குர்ஆனிய வசனங்கள் இதனை உறுதி செய்கின்றன. அதான் உடைய விடயமும் இதற்குட்பட்டதாகவே காணமுடிகிறது. கூட்டாலோசனை மூலம் பெறப்படும் முடிவுகளால் நன்மைகளே கிட்டும்.

மேற்குறிப்பிட்ட திருமறை வசனங்களுக்கு அமைவாக செயற்பட்டு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒலிபெருக்கி மூலமாக 'அதான்' சொல்வது தொடர்பாக மேற்கொண்ட மஷ_ரா அடிப்படையிலான முக்கியமானதொரு தீர்மானத்தை உங்களுக்கு அறியத் தர விரும்புகிறோம்.

நாட்டில் ஒலிபரப்பு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் சுற்றாடல் மாசடைதலை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள இடைக்கால உத்தரவுகளை அமுல்படுத்தும் வேளையில், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதன் சட்டத்தரணிகள் ஊடாக கடந்த 2007.12.10 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்த வேளையில், மேற்படி இடைக்கால உத்தரவுகளுக்கு பின்வருமாறு திருத்தம் செய்து உயர் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

01.முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மாத்திரம், சுப்ஹூத் தொழுகை தவிர்ந்த ஏனைய தொழுகைகளுக்காக, ஏதேனும் ஒரு மஸ்ஜிதில் இருந்து மாத்திரம் ஒலிபெருக்கியூடாக 'அதான்' சொல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தகைய 'அதான்' அழைப்பு மூன்று நிமிடங்களுக்குள் மாத்திரம் அமைதலும் வேண்டும்.

02.மேற்கூறிய வகையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழுகைக்கான 'அதான்' அழைப்பை ஒலிபெருக்கியூடாக மேற்கொள்ளுகின்ற வேளையில், முடியுமானவரை ஒலிபெருக்கியூடாக எழுப்பப்படும் சப்தத்தை மிகக் குறைந்த அளவில் பேணிக் கொள்ள வேண்டுமென்பதுடன்,

03.இந்நிபந்தனைகளுக்கு முரண்பாடாக செயற்படும் பொழுது, அதற்கெதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய உயர் நீதிமன்ற உத்தரவை செயற்படுத்தும் வகையில் பொலிஸ் மாஅதிபர் ஒரு சுற்றுநிருபத்தை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

எனவே தயவுசெய்து சகல மஸ்ஜித் நிருவாகிகளும், ஜமா'அத்தினரும் மேற்படி உயர் நீதிமன்ற உத்தரவுக்கமைவாக செயற்படுமாறும், இவ்வுத்தரவுகளை அமுல்படுத்துவதற்கு பொலிஸாருக்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றது.

ஓலிபரப்பு சாதனங்கள் பாவனை தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபை புதிய ஒழுங்கு விதிகளின் நகல் ஒன்றை ஏற்கனவே தயாரித்துள்ளதுடன், அதன் பிரதியொன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நகல் ஒழுங்கு விதிகளில்
மஸ்ஜிதில் 'அதான்' ஒலிபரப்பு செய்வதற்கு வழிவகுக்கக்கூடிய தேவையான திருத்தப் பிரேரணைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பாக கடந்த 2008.02.10 இல் கொழும்பில் ஒன்றுகூடிய பல்வேறு முஸ்லிம் நிறுவனங்களின் ஆலோசனைகளும் அங்கீகாரமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்புதிய ஒழுங்கு விதிகள் சட்டமாக்கப்படும் போது, அது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் விநயமாக செயற்படுகின்றது. இதற்காக முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை மிக விரைவில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக அவர்களது அவதானத்தையும் கோரவுள்ளது.

மேற்கூறிய வகையில் உயர்நீதிமன்றம் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கியுள்ள 'அதான்' ஒலிபரப்பு செய்வதற்கான அனுமதியை தவறாக விளங்கிக் கொண்டும் அல்லது இவ்வுத்தரவுக்கு அமைவாக செயற்படாமலும் ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்திய சில மஸ்ஜித்கள் தொடர்பாக கடந்த 2008.02.11 இல் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளதாகவும் எமது சட்டத்தரணிகள் ஊடாக நாம் அறியக் கூடியதாகவுள்ளது.

எனவே மஸ்ஜித் நிருவாக சபை உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள் இது தொடர்பில் போதிய கவனம் செலுத்தி உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறாத வகைளில் 'அதான்' ஒலிபரப்புச் செய்யும் நடவடிக்கைகளை கையாளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

குறிப்பு:

01.பிரதேச மஸ்ஜித்களின்; நிர்வாகிகள், துறைசார்ந்தோர் ஒன்றுகூடி இதுபற்றிய கலந்துரையாடல்கள் மூலம் சுமுகமாக மேற்படி உத்தரவை அமுல்படுத்த முயற்சித்தல்.

02.பிரதேச மஸ்ஜித்களின் நிர்வாகிகள், துறைசார்ந்தோர் ஒன்றுகூடி பிரதேச பொலிஸ் அத்யட்சகர்களுடன் இதுபற்றிய கலந்துரையாடல்கள் மூலம் சுமுகமான ஒரு தீர்வைப் பெற முயற்சித்தல்.

03.இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மஸ்ஜித்களினூடாக ஐக்கியம், நிதானம்,தலைமைத்துவத்துவத்துக்கு கட்டுப்படல், சகிப்புத்தன்மை ஆகியன கொண்டு செயற்பட்டு ஷரீஆவையும் எமது உரிமைகளையும் பாதுகாக்க கூட்டு முயற்சியிலீடுபடல்.

04.எமது சகல முயற்சிகளும் கைகூட, ஈமான், நல்லமல்கள், குடும்ப உறவுகள், சமூக உறவுகள் ஆகியவற்றைப் பேணி நடப்பதுடன், சகல பிரச்சினைகளும் நீங்கஅதிகமாக
துஆக்களில் ஈடுபடுவோமாக.

தலைமையகம்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,
211, ஒராபி பாஷh வீதி,
கொழும்பு 10.

14.02.2008 (கி.பி.)
07.02.1429 (ஹிஜ்ரி)