இன்றைய பயங்கரவாத சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கான சில ஆலோசனைகள்

- அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல் - ஹலீமி  -

தலைவிரி்தாடும் இன்றைய இனவாதம் புதுப்புது சதிகளை நோக்கிப் புறப்பட்டிருப்பதை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். முன்னொரு காலத்தில் ஒரு வார்த்தையைக் கூட முஸ்லிம்களுக்கு எதிராக பாவிக்க அச்சப்பட்டவர்கள் இன்று நேரடியாக ஊடகங்களின் மூலமாகவும்,
பகிரங்க மேடைபேச்சிக்களாலும் முஸ்லிம்களை இம்சைப்படுத்தும் காட்சிகளைப்; பார்த்துக்கொண்டிருக்கிறோம். மட்டுமின்றி முஸ்லிம்களின் மதஸ்தானங்கள், மஸ்ஜித்களின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் உரிமைகளுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் எப்படியாவது முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கவும், மஸ்ஜித்களையும், இஸ்லாமிய தாபனங்களையும் பயங்கரவாதிகளை உருவாக்கும் தளங்களாகவும் உருவெடுத்துக் காட்டுவதற்கும் முழு முயற்சிகளையும் குறிப்பிட்ட கும்பல் செய்து வருகிறது. இந்த சவால்களுக்கு நீதியாகவும், நேர்மையாகவும் தூரநோக்கோடும், அறிவுபூர்வமாக முகங்கொடுக்க முஸ்லிம்கள் தயாராக வேண்டியுள்ளது. அதனடிப்படையில் கீழ்வரும் மிக முக்கியமான விடயங்களை இலங்கை வாழ் சகல முஸ்லிம்களும் கவனத்திற் கொள்வது மிக அவசியமாகும்.

CCTV பொருத்துதல்:
கிராமப் புர மஸ்ஜித்கள், இஸ்லாமிய தாபனங்களை விட நகர் புரங்களிலுள்ளவைகளை மிகவும் அவதானமாகக் கண்கானித்துக் கொள்வது மிக அவசியமாகும். இங்கு வரும் புதிய முகங்களை மிக அவதானமாகக் கவனியுங்கள். கையில் கொண்டுவரும் பொருட்களை அவதானியுங்கள். கொண்டு வரும் பொருட்களை அல்லது பொதிகளை  திரும்பக் கொண்டு செல்லாமல் அவைகளை விட்டுச் செல்கிறார்களா? என்பதை மிக அவதானமாகக் கவனியுங்கள். இது தான் மிக முக்கிய விடயமாகும். இன்று எம்மைக் குற்றவாளிகளாக ஆக்குவதற்கு வெளியில் இருந்து பொருட்களை (ஆயதங்கள், போதைப் பொருட்கள் போன்றவற்றை) உள்ளே கொண்டு வந்து வைத்து விடுவர். இது விடயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இதற்கு இன்றைய சூழ் நிலையில் மிக உதவியாக இருப்பது தான் ஊஊவுஏ கெமராக்கள். அதன் மூலமாக சூழ்சிக்காரர்களை மிக இலகுவாக கண்டுகொள்ள முடியும். இறையருளால் இன்று இந்தப் பிரச்சினைகளுக்குப் பிறகு தலைநகரின் பல இஸ்லாமிய தாபனங்கள் இந்த ஊஊவுஏ பாதுகாப்புக் கெமராக்களை பொருத்தியுள்ளனர். இது முடியாதபோது குறைந்தது ஒரு பாதுகாப்பு ஊழியரையாவது 24 மணி நேரமும் கண்கானிக்க நியமனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் கட்டிடத்தின் மறைவாக பகுதிகளை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ஆவணப்படுத்தல் (Documentation):
மஸ்ஜித்களோ அல்லது ஏணைய இஸ்லாமிய பொது நிலையங்களோ முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும். பதிவு செய்யப்படாத எந்தவொரு நிறுவனங்கள் தொடர்பாகவும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுப்பது மிகச் சிரமமான காரியமாகும். அதுபோலவே கலவரங்களுக்கும் வீண் சண்டைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் தகவல்களையும் மிக நிதானமாக ஆவணப்படுத்துங்கள். யார் யார் என்னென்ன காரியங்களில் ஈடுபடுகிறார்களோ அத்தனை விடயங்களினதும் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்படல் வேண்டும்.

திடீர் நிகழ்வுகளின்;போது:
திடீரென ஏற்படும் கலவரங்களின் போது உடனடியாக அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவியுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் சட்டத்தைக் கையிலெடுக்கும் காரியங்களில் ஈடுபடலாகாது. மேலதிக சட்ட ஆலோசனைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் 0759700910ஃ0759700911ஃ0759700913 என்ற இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். அது போலவே எக்காரணம் கொண்டும் திடீரென தொடர்ந்தும் செயற்பட்டு வந்த மஸ்ஜித் அல்லது ஏணைய நிலையங்களை முற்றாக மூடி விடாதீர்கள். நாம் அச்சப்பட்டு இவ்வாறு மூடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதனை மீண்டும் திறப்பதற்கு சக்தியற்றவர்களாகி விடுவோம்.

ஒலிபெருக்கிப் பாவணை:
நாம் வாழுவது முஸ்லிம் பிரதேசமோ அல்லது முஸ்லிம் அல்லாத பிரதேசமோ சரி எப்பொழுதும் மஸ்ஜித்களுடைய ஒலிபெருக்கியின் சப்தத்தை முடிந்தளவு குறைத்தே வைக்க முயற்சிக்க வேண்டும். இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 14.02.2008 அன்று வெளியிட்டிருந்த சுற்று நிரூபத்திலிருந்து சில முக்கிய வரிகளை உங்களுக்கு முன் வைக்கிறேன்.

........அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒலிபெருக்கி மூலமாக 'அதான்' சொல்வது தொடர்பாக மேற்கொண்ட மஷ_ரா அடிப்படையிலான முக்கியமானதொரு தீர்மானத்தை உங்களுக்கு அறியத் தர விரும்புகிறோம்.

நாட்டில் ஒலிபரப்பு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் சுற்றாடல் மாசடைதலை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள இடைக்கால உத்தரவுகளை அமுல்படுத்தும் வேளையில், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகளை அகிலஇலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதன் சட்டத்தரணிகள் ஊடாக கடந்த 2007.12.10 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்த வேளையில், மேற்படி இடைக்கால உத்தரவுகளுக்கு பின்வருமாறு திருத்தம் செய்து உயர் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

01.முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மாத்திரம், சுப்ஹூத் தொழுகை தவிர்ந்த ஏனைய தொழுகைகளுக்காக, ஏதேனும் ஒரு மஸ்ஜிதில் இருந்து மாத்திரம் ஒலிபெருக்கியூடாக 'அதான்' சொல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தகைய 'அதான்' அழைப்பு மூன்று நிமிடங்களுக்குள் மாத்திரம் அமைதலும் வேண்டும்.

02.மேற்கூறிய வகையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழுகைக்கான 'அதான்' அழைப்பை ஒலிபெருக்கியூடாக மேற்கொள்ளுகின்ற வேளையில், முடியுமானவரை ஒலிபெருக்கியூடாக எழுப்பப்படும் சப்தத்தை மிகக் குறைந்த அளவில் பேணிக் கொள்ள வேண்டுமென்பதுடன்,

03.இந்நிபந்தனைகளுக்கு முரண்பாடாக செயற்படும் பொழுது, அதற்கெதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய உயர் நீதிமன்ற உத்தரவை செயற்படுத்தும் வகையில் பொலிஸ் மாஅதிபர் ஒரு சுற்றுநிருபத்தை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.......

மாடறுத்தல்:
இன்று எமது முஸ்லிம்கள் பலரும் மாடறுப்பது தான் மார்க்கம், அதனையே (மாட்டையே) அறுப்பது தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற வணக்கங்களுக்குச் சமமானது எனவும் எண்ணுகின்றனர். மட்டுமன்றி இது எமது உரிமை என்றும் இதற்கு உயிரைக் கொடுத்தேனும் போராட வேண்டுமென்றும் மக்களைத் தவறாக வழிநடாத்த முற்படுகின்றனர். இவைகள் அனைத்தும் மதியில்லாத செயல்களாகும் என்பதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எது எவ்வாறாயினும் நாம் வாழ்வது ஒரு இஸ்லாமிய நாடல்ல என்பதையும், தற்போதைய சூழ்நிலையையும் கவனத்திற் கொண்டு செயற்பட முயற்சிக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு விடாது மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

குர்பான் கொடுப்பது நிச்சயம் அல்லாஹ்வை நெருங்கும் ஓர் அமலாகும். அது போலவே அந்தக் குர்பானிக்கு மாட்டை அறுத்துப் பலியிடுவதும் சிறந்ததாகும். மாடு அறுக்க முடியாத பிரதேசங்களில் நாம் ஏன் வீண் சிரமங்களையும், வம்புகளையும் விலைக்கு வாங்குவது மட்டுமல்லாது எமது சமூகத்தையே காட்டிக் கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்? நாம் ஏன் மாட்டுக்குப் பகரமாக ஆடுகளை குர்பானிக்குப் பயன்படுத்தக் கூடாது? இஸ்லாம் ஒருபோதும் எமது மார்க்கக் கடமைகளின் மூலம் எம்மைச் சிரமப்படுத்தவில்லை. தீனுல் இஸ்லாம் மிக இலேசானது. இவ்வாறான மாற்றீடுகளின் மூலம் அல்லாஹ் ஒருபோதும் எம்மைத் தண்டிக்க மாட்டான் என்பதை நாம் அறிந்து செயற்பட வேண்டும்.

பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்:
மஸ்ஜித்கள் தோறும் பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிவாசல் நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்நிகழ்வுகளில் தற்போதைய சூழ்நிலைகளில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்பதனையும் சக வாழ்வு, விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை போன்ற தலைப்புக்களில் ஆலிம்கள், கல்விமான்கள், புத்தி ஜீவிகளைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடாத்தி மக்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பொது மக்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும்; செய்ய வேண்டும். தவ்பா, இஸ்திஃபார், துஆக்களே நமது ஆயுதங்களாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இதனை மிஞ்சிய ஆயுதங்கள் எதுவுமில்லை.

எனவே எந்த நிலையிலும் எவரும் தனித்து நின்றி முடிவுகளை எடுக்கவோ, அல்லது தன்னிச்சையாக எக்காரியத்தையும் செய்யவோ முற்படலாகாது. அவ்வாறு செயற்படுவதானது பாரிய சமூக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். எனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஏணைய அமைப்புக்களோடும் ஆலோசனைகளைச் செய்து கொண்டே காரியத்தில் கால்வைக்க வேண்டும். எல்லாவற்றையும் அல்லாஹ்வே மிக அறிந்தவன்.